10 தொகுதிகளில் கூட திமுக வென்றிருக்காது - ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு

Tamil nadu ADMK DMK Aadhav Arjuna TVK
By Vinoja Jun 13, 2026 11:55 AM GMT
Report

"கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது. அதிமுகவும், திமுகவும் இப்போதே கூட்டணி அமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டன" என்று அமைச்சரும், தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள தவெக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணியில் ஆட்சி நடத்தி வருகிறது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த நிலையில், இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த விஜயதாரணியும் இன்று தவெகவில் இணைந்தார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

10 தொகுதிகளில் கூட திமுக வென்றிருக்காது - ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு | Aadhav Said Dmk Would Not Have Won Even 10 Seats

ஆதவ் அர்ஜுனா பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா,

“மக்கள் விரும்பும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையால் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதில் எந்தவித குதிரைப் பேரமும் இல்லை. எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

அந்தத் தொகுதியில் எங்கள் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கினார். பல்வேறு சூழ்ச்சிகளின் மூலமே அவர் வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறவில்லை.

உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் அவர்கள் எங்களிடம் வர வேண்டும்? அதற்கான காரணத்தை அதிமுக சிந்திக்க வேண்டும். அதிமுகவும், திமுகவும் இப்போதே கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது.

காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் முடிவுகளில் திமுக தலையிட முடியாது. வாரம் தோறும் திரைப்படங்களை வெளியிட்டு வந்த ரெட் ஜெயன்ட் நிறுவனம், கடந்த ஒரு மாதமாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

10 தொகுதிகளில் கூட திமுக வென்றிருக்காது - ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு | Aadhav Said Dmk Would Not Have Won Even 10 Seats

தற்போது நடைபெறுவது அண்ணன் விஜய்யின் ஆட்சி.யாராலும் மிரட்டவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது. திரைப்படத் துறை எந்தவித அச்சுறுத்தலோ, பயமோ இன்றி இயங்கி வருகிறது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ட கனவும், தவெகவின் கனவும் ஒன்றுதான்.

விஜய்யின் மக்கள் செல்வாக்கு குறித்து தெரியவில்லை என்று நேற்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.50 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருப்பதாகச் சொல்பவர்கள் இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையெனில், உதயநிதி என்ன கண்டுபிடிப்பார் என்பது தெரியவில்லை” என்று அவர் பேசினார்.