கடலூரிலிருந்து கடல் கடந்த காதல் - பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த தமிழ்நாட்டு பையன்!
கடலூரை சேர்ந்த நபர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கடல் கடந்த காதல்
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி டி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (28). இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அங்கு பணிபுரியும் சக ஊழியரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரொனாமி டியாங்கோ குவாங்கோ(25) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திருமணம்
இந்நிலையில் தமிழ் கலாச்சாரப்படி மணமகன் வீட்டில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்காக தனது காதலி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கடலூருக்கு அழைத்து வந்தார் பத்மநாபன்.
பின்னர் பத்மநாபன்-ரோனமி டியாங்கோ குவாங்கோ ஜோடிகளுக்கு இந்து முறைப்படியும், தமிழ் கலாச்சாரப்படியும் நேற்று திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழா கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போல சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இது குறித்து மணமகள் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில் 'தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல் நடந்த எங்களது திருமணத்தில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள கலாச்சாரம் மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.