ஒரு வருஷ மழை - ஒரே நாளில் பெய்துள்ளது..!!4 மாவட்டங்கள் நிலை - தலைமை செயலாளர் விளக்கம்
கடந்த இரண்டு நாட்களாக தென்தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை பெய்து வருகின்றது.
வரலாறு காணாத மழை
வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப்பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.மீட்புப்பணிகளை குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
ஒரு வருட மழை - ஒரே நாளில்
அப்போது பேசிய அவர், ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது என்று குறிப்பிட்டு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்று தகவல் அளித்த அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 7,500 பேர் மீட்கப்பட்டு ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்து 4 மாவட்டங்களில் மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது என தெரிவித்துள்ளார்.