அலங்காநல்லுாரில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக தயாராகும் ஜல்லிக்கட்டு மைதானம்..!

M K Stalin Government of Tamil Nadu Madurai Jallikattu
By Thahir Aug 08, 2023 02:27 AM GMT
Report

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு 

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

A world-class jallikattu ground in Madurai

குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கென்று புகழ்பெற்ற அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை.

இந்த பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான வெளிநாடு மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.

போதி இடவசதி இல்லாத காரணத்தால் பல்வேறு மக்கள் போட்டியை காண முடியாத சூழல் ஏற்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

முதலமைச்சர் அறிவிப்பு 

இந்த நிலையில் மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து தரப்பினரும் பார்க்க வசதி ஏற்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சின்னமாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் ரூ.44 கோடியில் ஒரே நேர்த்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் கிரிக்கெட் மைதானம் போன்று உலக தரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

A world-class jallikattu ground in Madurai

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது, பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கால்நடை சந்தை போன்றவற்றை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், மைதானம் பராமரிப்புக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உலகத்தரத்தில் பிரமாண்ட மைதானம் 

மேலும், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை சுற்றுலாத்துறை மூலம் ஒரு பண்பாட்டு வளாகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மைதானம் கட்டி முடித்ததும், அதனை நிர்வகிக்க விளையாட்டு மைதானங்களை நிர்வப்பதில் நல்ல அனுபவம் பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரர்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை அமைய இருக்கிறது.

A world-class jallikattu ground in Madurai

இந்த மைதானத்திற்கு நுழைவாயில் வளைவு, காளைகள் சிற்பக்கூடம், உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை அமைய இருக்கிறது.

அலங்காநல்லூரில் இருந்து இந்த மைதானத்திற்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது.