தந்தையை துண்டு, துண்டாக வெட்டிய மகன் ... விலைக்கு இடம் வாங்கி புதைத்த கொடூரம்
சென்னையில் சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக மகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த குமரேசன் 80வயது முதியவரை காணவில்லை என மகள் காஞ்சனா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் நடந்த தினத்தில் இருந்து குமரேசனின் மகன் குணசேகரன் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் அவர் வீட்டில் ரத்தக்கறை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான குணசேகரனின் மனைவியிடம் தீவிரமாக நடந்த விசாரணையில் கடந்த மே 18 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், அருகே உள்ள சோளிங்கரில் உள்ள அவரது நண்பர் ஒருவரை பார்க்க சென்றது தெரியவந்தது.
இதனிடையே காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரனின் நண்பர் வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனக்கு எதிராக வைக்கப்பட்ட செய்வினையை புதைக்க வேண்டுமென சொல்லி தண்ணீர் பேரல் ஒன்றை குணசேகரன் பூமிக்கடியில் புதைத்ததாக கூறியுள்ளார்.
அதனை எடுத்து பார்த்தபோது உள்ளே குமரேசனின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் சொத்துத்தகராறில் குமரேசன் கொலை செய்யப்பட்டதும், அவரது உடலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு கொண்டு சென்று குணசேகரன் புதைத்ததும் தெரிய வந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குணசேகரன் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.