அமெரிக்காவில் பல பேர் உயிரை காப்பாற்றிய சீக்கிய ஊழியர்... கடைசியில் உயிரிழந்த பரிதாபம்...
அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல பேர் உயிரை காப்பாற்றிய சீக்கியர் கடைசியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் ரயில்வே பணி மனையில் சாமுவேல் காசிடி என்ற ஊழியர் துப்பாக்கியால் சக ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலியானார்கள். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடந்த போது இந்திய வம்சாவளி ஊழியரான சீக்கியர் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தப்தேஜ் தீப் சிங் என்ற அந்த இளைஞர் ரயில் பைலட்டாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த போது அந்த பணிமனையில் இருந்த அவர் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் வெளியேறுவதற்காக பாதையை திறந்துவிட்டு பலரை காப்பாற்றினார்.
பின்னர் அவர் படிக்கட்டு வழியாக கீழே வந்த போது அவரையும் சாமுவேல் காசிடி துப்பாக்கியால் சுட சம்பவ இடத்திலேயே தப்தேஜ் தீப் சிங் உயிரிழந்தார். தன் உயிரைத் துறந்து பலரின் உயிரை காப்பாற்றிய அவரின் தியாகத்தை சக ஊழியர்கள் பாராட்டியுள்ளனர்.