200'க்கு மேல் இருக்கும் குற்றவழக்கு - பொறுப்பு கொடுத்து ரவுடியை கட்சியில் இணைத்த பாஜக!!
தமிழக பாஜகவில் நெற்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் கட்சியில் இணைத்தும் அவருக்கு மாநில பொறுப்பு வழங்கியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழக பாஜக
தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழக பாஜக கட்சியினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தினமும் செய்திகளில் கட்சி குறித்து எதாவது ஒரு தகவல் வருவது, மக்களிடம் எளிய வழியில் நேராக சென்று சந்திப்பு என பல்வேறு வழிகளில் அக்கட்சி நிர்வாகிகள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், பொதுவாகவே தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்ற காரணத்தால், பாஜகவிற்கு அக்கட்சி எதிர்பார்க்கும் ஏற்றங்கள் கிடைக்கவில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கட்சி வளர்ந்துள்ளதா? என்று கேட்டால் ஆம் என்றே சொல்லலாம்.
ரவுடிக்கு மாநில பதவியா..?
ஒரு கட்சியின் கொடியை நிர்வாகிகள் போஸ்டர்கள் வழியாக, வண்டிகளில் வெளிப்படுத்தி செல்வது போன்றவை அதிகரிக்கிறது என்றால் அக்கட்சி வளர்கிறது என்றே பொருள். அவ்வாறு பார்த்தால் ஒரு வகையில் பாஜக வளர்ச்சியே அடைந்துள்ளது. ஆனாலும், பொதுமக்களிடம் அக்கட்சி மீது அதிருப்தி தொடர்ந்த வண்ணமே உள்ளன.
தற்போது அது அதிகரிக்கும் வகையில் மற்றொரு செயல் நடந்தேறியுள்ளது. 200க்கும் மேல் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட பிரபல ரவுடியாக இருப்பவர் நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யா. இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைத்துள்ளதாகவும், அக்கட்சியில் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இவரது மனைவியும் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியுமான விஜயலக்ஷ்மி 2021-ஆம் ஆண்டு நெற்குன்றம் ஊராட்சி துணை தலைவராக பதவி ஏற்கும் போது கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.