வயல் வெளியின் நடுவில் போடப்படும் சாலை - கண்ணீர் விடும் விவசாயி

By Thahir Dec 03, 2022 06:06 AM GMT
Report

தஞ்சாவூர் அருகே விவசாயம் செய்து வரும் வயல் வெளியில் உள்ள பயிர்கள் மீது மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

அதிர்ச்சிக்குள்ளான விவசாயிகள்

நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் இங்கு விளைவிக்கப்படும் நெற் பயிர்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக மக்களின் உணவு தேவையை மட்டுமின்றி அருகில் உள்ள மாநிலங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர் தஞ்சையை சேர்ந்த விவசாயிகள்.

இந்த நிலையில் தஞ்சை திருவையாறு விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியது போல் விளை நிலங்களில் பயிர்களுக்கு மேல் சாலை அமைக்கப்பட்டு வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

பயிர்கள் மீது கொட்டப்படும் மண் 

திருவையாறு புறவழிச்சாலையானது விளை நிலங்கள் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் விளைந்து வரும் நிலையில் அதன் மீது மண் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

வயல் வெளியின் நடுவில் போடப்படும் சாலை - கண்ணீர் விடும் விவசாயி | A Road Is Laid In The Middle Of The Field

இது தொடர்பாக வீடியோ ஒன்றில் விவசாயி மண் கொள்ளையடிக்கப்படுவதாக விளைந்து வரும் பயிர்கள் மீது மண் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கேள்வி எழுப்பிய பி.ஆர்.பாண்டியன் 

இதையறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சாலை அமைத்து வரும் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது முறையாக தகவல் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த அவர் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் விளையும் நெற்பயிர்கள் மீது மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர் மறுப்பு 

இது குறித்து ஒப்பந்ததாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது நாங்கள் கையகப்படுத்தப்படும் அனைத்து விவசாய நிலங்களின் முன்பு 3 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு பலகை வைத்து விட்டோம்.

இந்த நிலத்தில் 45 நாட்கள் வளரும் நெற்பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் விளை பயிர்கள் மீது மண் கொட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு நிலத்தின் உரிமையாளர் வளரும் பயிர்கள் மீது தான் மண் கொட்டப்பட்டு வருகிறது. கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு நிதி வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.