கொளுத்தும் வெயிலில் 7 கி.மீ நடந்து சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!
மகாராஷ்டிராவில் 7 கி.மீ துாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்ற கர்ப்பிணி பெண் வெப்ப அலையால் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
கொளுத்தும் வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் ஓசார் வீரா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
வரும் 27-ம் தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சாலை, வாகன வசதி இல்லாததால் 3.5 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுட்டெரிக்கும் வெயிலில் சோனாலி வாகத் நடந்து சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் சோனாலியை பரிசோதித்தார். பின்னர் மருத்துவர் இது பிரசவ வலி இல்லை என்றும் சாதாரண வலி என்றும் கூறி மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
இதையடுத்து மீண்டும் 3.5 கி.மீ தொலைவு நடந்து வீட்டுக்கு சோனாலி திரும்பி சென்றார். கடும் வெயிலில் சுமார் 7 கி.மீ தொலைவுக்கு அவர் நடந்து சென்றதால் வீட்டுக்கு வந்ததும் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த கருவும் உயிரிழந்தது.

அடிப்படை வசதியில்லாததால் நேர்ந்த கொடூரம்
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் நிகம் கூறும் போது சோனாலிக்கு ரத்த சோகை பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 12 ஆம் தேதி அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதால் உள்ளூர் சுகாதார ஊழியர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த மருத்துவர் சோனாலியை பரிசோதித்து மருந்து,மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
வெயிலில் நீண்ட தொலைவு நடந்த சென்றதால் அவர் உயிரிழந்திருக்கிறார். பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில் சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.