பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம் - உருவாகிறது விவசாய அமைப்புகள் கட்சி
பஞ்சாபில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்,
மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் தொடர்ந்து ஒராண்டாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அரசு பல மாத போராட்டத்திற்குப் பிறகு விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதனிடையே பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கின் லோக் பஞ்சாப் காங்கிரஸ்- பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் புதிய திருப்பமாக 22 விவசாய அமைப்புகள் சார்பில் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள் ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.
இந்த புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இந்தத் தகவலை விவசாய அமைப்புகள் மறுத்துள்ளன. இருப்பினும், வரும் காலத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது.