உருவாகிறது தேஜ் புயல் - வடகிழக்கு பருவமழை தொடங்கியதா?

Chennai Department of Meteorology Puducherry
By Thahir Oct 20, 2023 11:13 AM GMT
Report

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர புயலாக வலுப்பெற்றால் இந்த புயலுக்கு இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட “தேஜ்” என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உருவாகும் புதிய புயல்

நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.

உருவாகிறது தேஜ் புயல் - வடகிழக்கு பருவமழை தொடங்கியதா? | A New Storm Is Brewing

இது மேலும் வலுவடைந்து 22ம் தேதி மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.  

2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை

அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். இதனையடுத்து , 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ என்று பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் உருவாகினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உருவாகிறது தேஜ் புயல் - வடகிழக்கு பருவமழை தொடங்கியதா? | A New Storm Is Brewing

மிதமான மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். இதனால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.