எட்டு மாதங்களாக தங்கிவிட்டு பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பிய நபர் - என்ன நடந்தது?
ஒரு ஹோட்டலில் எட்டு மாதம் தங்கிவிட்டு 25 லட்ச ரூபாய் பணத்தை கட்டாமல் தப்பியோடிய நபரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் முரளி காமத் என்ற 43 வயதான நபர் திரைப்பட துறையில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த எட்டு மாதங்களுக்குமுன்பு கார்கர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுத்து அவரது மகனோடு தங்கியிருந்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு பணத்தை டெபாசிட் செலுத்துவதாக உறுதியளித்து விட்டு 8 மாதங்கள் வரை தங்கியுள்ளார். இதனால் அறையின் வாடகை ரூ. 25 லட்சம் ஆனது. இதனால் பொறுமை தாங்காத ஹோட்டல் நிர்வாகம் பணத்தை கேட்டு அவரை வற்புறுத்தி வந்தது.
இதனால் தப்பியோட நினைத்த அவர், குளியலறையின் ஜன்னல் வழியாக மகனுடன் தப்பி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் இதை கண்டறிந்த ஹோட்டல் நிர்வாகம், போலீசில் புகார் அளித்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.