வழுக்கை தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம் - ஆண்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த தீர்ப்பு

By Petchi Avudaiappan May 14, 2022 06:54 AM GMT
Report

ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 

பொதுவாக உடல் எடை, தோல்களின் தன்மை, முடிகளின் அடர்த்தி, உயரம் குறைவு போன்றவற்றை சுட்டிக்காட்டி அனைத்து பாலினத்தைச் சேர்ந்தவர்களும் உருவக்கேலி செய்யப்படுவது வழக்கம். இதில் ஆண்களை கிண்டல் செய்ய பெரும்பாலும் வழுக்கை, சொட்டை போன்ற கேலிச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. 

இதனிடையே வடகிழக்கு இங்கிலாந்தின்  யார்க் சைர் நகரில் உள்ள தனியாா் நிறுவனமொன்றில் இருந்து கடந்தாண்டு எலக்ட்ரீசன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் டோனி 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், உயரதிகாரி ஒருவர் தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கப்பட்டதாகவும் தொழிலாளர் தீர்ப்பாயத்திடம் முறையிட்டிருந்தார். 

இந்த வழக்கை 3 பேர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் 1995 ஆம் ஆண்டு வழக்கை குறிப்பிட்டு ஆணை வழுக்கை என குறிப்பிடுவது பெண்ணின் மார்பகம் குறித்து விமர்சிப்பது போன்றது என தீர்ப்பாயம் கூறியது. எனவே டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனா். பொதுவாக இன்றைக்கு ஒருவரை உருவக்கேலி செய்பவர்கள் நாளை அது தனக்கே நடக்கும் போது அதன் வலியை உணர்வீர்கள் என்பதால் இப்படி செய்து அடுத்தவர் மனதை நோகடிக்காதீர்கள் என பலரும் தெரிவித்துள்ளனர்.