நம்ப வைத்து ஏமாற்றிய காதலி...காதலனை கொன்றது எப்படி? - திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்
கேரளா மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா. இதற்கு முன்பு, ஐந்து முறை கொலை செய்ய முயற்சித்ததும், (தடயமே இல்லாமல் கொலை செய்வது எப்படி) என்று கூகுளில் தேடியதும் தற்போதைய தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
10 மாதங்களாக கொலை செய்ய முயற்சித்த காதலி
அவர், ஆயுர்வேத மருந்து என கூறி நம்பவைத்து, விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்குக் கொடுத்து கிரீஷ்மா கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஷரோன் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் தயாரித்து வரும் குற்றப்பத்திரிக்கையில், கிரீஷ்மா இதற்கு முன்பே ஷரோனைக் கொலை செய்ய ஐந்து முறை முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
கிரீஷ்மா, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஷரோனைக் கொலை செய்ய திட்டம்போட்டும், கூகுளில் பல விஷயங்களைத் தேடியும் தனது திட்டத்தை தயார்செய்துள்ளார்.
கொலை நடந்து 73 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமரன் நாயருக்கும் பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது முதல் கணவர் இறந்துவிடுவார் என்று ஜோதிடர்கள் சொன்னதால் தான் அச்சமடைந்திருந்தேன் என்று கிரீஷ்மா சொன்னதும் முற்றிலுமாக பொய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூகுளில் கொலை செய்வது எப்படி என்று தேடிய காதலி
வேறொருவருடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டும் கூட, காதலில் இருந்து விலக ஷரோன் மறுத்ததால், கிரீஷ்மா இந்த கொலை திட்டத்தை போட்டிருக்கிறார்.
ஆகவே, முதலில் கல்லூரியிலேயே விஷம் கலந்த தண்ணீரை, டோலோ மாத்திரைப் போட கொடுத்துள்ளார். ஆனால், மாத்திரை மிகக் கசப்பாக இருந்ததாகக் கூறி அதனை ஷரோன் துப்பிவிட்டாராம்.
பிறகு, விஷம் கலந்த பழச்சாறு கொடுத்தபோதும் அதனை ஷரோன் ஏதோ காரணத்தால் குடிக்காமல் இருந்துள்ளார்.
இதுபோல, ஐந்து முறை தோல்வியடைந்த நிலையில்தான், இறுதியாக ஷரோன் ஆயுர்வேத மருந்து என்று சொல்லிக் கொடுத்த விஷத் தண்ணீரைக் குடித்து,பொய்யான காதலுக்காக தனது உயிரை இழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின்போது, ஷரோன் ராஜை நான் கொலை செய்யவில்லை என்று கிரீஷ்மா கூறியதாகவும், பின் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது செல்போனில் கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, கொலை செய்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதையும் கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும், அதற்கு அவருக்கு என்ன விடை கிடைத்தது என்று அவர் விசாரணையில் தெரிவித்திருக்கிறாரா என தெரியவில்லை.
கசாயம் எனக் கூறி விஷத்தை கொடுத்த காதலி
வேறொருவருடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், காதலனை வீட்டுக்கு வரவழைத்து ஆயுர்வேத மருந்து என்று கூறி கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த வழக்கில், கிரீஷ்மா மற்றும் அவரது தாய் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷரோன் ராஜை விஷம் வைத்துக் கொலை செய்ய உதவியதாகவும், தடயங்களை அழித்ததாகவும், கிரீஷ்மாவின் தாய் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஷரோன் ராஜுக்கு கலந்து கொடுக்கப்பட்ட விஷ பாட்டிலை, வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் வீசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர், தனது காதலி கசாயம் என்று சொல்லி நம்பவைத்து கொடுத்த விஷத்தை குடித்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து பலியானார்.
தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஷரோன் ராஜ் என்ற இளைஞர், அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார்.
வீட்டுக்குச் சென்ற ஷரோனுக்கு அவரது காதலி, கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற விஷத்தை குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.பின், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தான் காதலித்த ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருந்து என்று பொய் சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
ஜாதகத்தை காரணம் காட்டிய காதலி
கடந்த ஓராண்டுக்கும் மேல் இருவரும் காதலித்து வந்ததாகவும், பின், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் கூட, தான் ஷரோனையே திருமணம் செய்வதாக கிரீஷ்மா சமாதானம் செய்துள்ளார்.
தனது ஜாதகப்படி, தான் முதலில் திருமணம் செய்து கொள்ளும் நபர் இறந்துவிடுவார் என்றும், அதனால் முதலில் ராணுவ வீரரைத் திருமணம் செய்து கொண்டு அவர் இறந்ததும் ஷரோனை திருமணம் செய்துகொள்வதாக கிரீஷ்மா கூறியுள்ளார். ஆனால், இதற்கு ஷரோன் ஒப்புக் கொள்ளவில்லை.
இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராணுவ வீரரிடம் காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என்றும் ஷரோன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஷரோன் தீவிரமாக இருந்ததால், அவரைக் கொலை செய்வது என்று கிரீஷ்மா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டுக்கு வரவழைத்து, ஆயுர்வேத மருந்து என்று கூறி பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்துடன் கலந்து கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதில் முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த ஆயுர்வேத மருந்தைக் குடித்த பிறகுதான் எனக்கு இப்படி ஆனது என்று பெற்றோரிடமோ, மருத்துவர்களிடமோ, காவல்துறையிடமோ ஷரோன் கூறவில்லை என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
தனது இறுதிக்கட்ட வாக்குமூலத்தில் கூட, காவல்துறையிடம், கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியுள்ளார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.