பேரறிவாளன் விடுதலை எதிரொலி... - நளினி, முருகன் உட்பட மற்ற 6 பேரும் விடுதலையாக வாய்ப்பு? வெளியான தகவல்?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர். மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.
பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலையின் மூலம், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.
கடந்த முறை பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின்போது ரவிச்சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்களும் இதில் இடைமனுதாரராக சேர்ந்து கொள்கிறோம் என நீதிபதிகளிடம் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, முதலில் பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் ஒரு தீர்ப்பை கொடுத்து விடுகிறோம்.
அடுத்ததாக, அந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்றவர்கள் தங்கள் விடுதலையைக் கோரலாம் என்று தெரிவித்தார். தற்போது, பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பைக் கொண்டு மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது.
பேரறிவாளன், சிறையின் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி நடந்தது தொடர்பான விஷயங்களும் அவரது விடுதலை விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது என்பதால் மற்ற 6 பேரின் விடுதலை விஷயத்திலும் அதுபோன்ற விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அனைவருக்கும், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விடுதலை தீர்ப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.