துாங்கவிடாமல் 17 மணி நேரம் சிறுவனை கேம் விளையாட வைத்த தந்தை - என்ன காரணம்?
சீனாவில் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய மகனுக்கு தந்தை நுாதன தண்டனை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்
வளர்ந்து வரும் நவீன உலகில் செல்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் அனைவரது கையிலும் இருந்து வருகிறது செல்போன்.
இந்த செல்போனுக்கு இளையதலைமுறையினர், குழந்தைகள், சிறுவர்கள், குடும்ப பெண்கள் உள்ளிட்டோர் அடிமையாகி வருகின்றனர்.

பெரும்பாலான பள்ளி சிறுவர்கள் செல்போனுக்கு அடிமையாகி அதிலே முழ்கி விடுகின்றனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் வீட்டில் வந்து வீட்டுப்பாடம் செய்து படிக்கிறார்களோ இல்லையோ பள்ளியில் இருந்து வந்த உடன் செல்போனை எடுத்து கேம் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த நிலையில் சீனாவில் செல்போனில் கேம் விளையாடிய மகனுக்கு தந்தை ஒருவர் கொடூர தண்டனை ஒன்றை கொடுத்துள்ளார்.
கேம் விளையாடிய மகனுக்கு தந்தை அளித்த தண்டனை
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஷென் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தனது தந்தையின் செல்போனை எடுத்து கேம் விளையாடியுள்ளான்.
பள்ளி பாடத்தை படிக்காமல் இரவு வரை செல்போனில் கேம் விளையாடுவதை பார்த்த அந்த சிறுவனின் தந்தை தனது மகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அந்த சிறுவனுக்கு அவரது தந்தை நள்ளிரவு 1 மணி தொடங்கி மறுநாள் மாலை 6 மணி வரை துாங்கவிடாமல் கேம் விளையாட வைத்துள்ளார்.

இதனால் அந்த சிறுவன் வாந்தி எடுத்துள்ளான். அதன் பிறகு சிறுவனை விட்டு இருக்கிறார். அவனது தந்தை இதை சமூக வலைத்தளத்திலும் ஒளிபரப்பி இருக்கிறார்.
தனது மகனிடம் இப்படி நேரம் கடந்து செல்போனில் வீடியோ கேம் விளையாட மாட்டேன் என கம்ப்யூட்டரில் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி பின்பு தான் அந்த சிறுவனை விட்டதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்று யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.