இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வந்தது சீனாவின் உளவுக்கப்பல்
இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் சென்றடைந்தது.
அனுமதி அளித்த இலங்கை அரசு
கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நளின் ஹெராத், சீனாவின் யுவான் வாங் கப்பல் ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகிறது. அந்தக் கப்பலை 17-ம் தேதி வரை அங்கேயே நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.

அங்கிருந்து செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும்’’ என்று கூறினார். இதற்கு இந்திய தரப்பில் கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தை உளவு பார்க்க வாய்ப்பு?
இலங்கைக்கு வரும் சீன உளவுக்கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை, செயற்கை கோள்களை கண்டறியும் வசதிகள் என அதிநவீன தொழில்நுட்களைக் கொண்டது.
முக்கியமாக, அது நிலைகொண்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் 750 கி.மீ தூரத்திலுள்ள இடங்களை உளவு பார்க்க முடியும்.
அப்படிப்பார்த்தால் இலங்கைக்கு அருகில் இருக்கும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் முக்கிய இடங்களை வேவுபார்க்க வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஶ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், துறைமுகங்கள், ராணுவப் படைத்தளங்களை ரகசியமாக உளவுபார்க்கக்கூடும்.
இலங்கை துறைமுகம் வந்தடைந்தது
இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமையும். எனவே, இலங்கைக்கு சீன உளவுக்கப்பல் வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இலங்கை அரசு சீனாவுக்கு உளவுக்கப்பலின் வருகையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து யுவான்-5 கப்பல் இலங்கையில் எல்லையை சென்றடையவில்லை. இதனிடையே இன்று இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் சென்றடைந்துள்ளது.

அங்கு வந்த யுவான் - 5 உளவுக் கப்பலுக்கு இலங்கையில் உள்ள சீனாவின் துாதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.