மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரங்கிமலை கொலை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற தனியார் கல்லூரி மாணவி சதீஷ் என்ற வாலிபரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி சத்யா கொல்லப்பட்ட நிலையில் மகள் இறந்த சோகத்தில் கடந்த 14 ஆம் தேதி சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, அதன்படி இந்த வழக்கை டி.எஸ்.பி செல்வக்குமார் தலைமையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர் . இந்த நிலையில் தற்போது சிறையில் உள்ள சதிஷை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .
காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது.
இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.