திருமண ஆசையில் இருந்த 90ஸ் கிட் - கொடூரமாக ஏமாற்றிய 5 பெண்கள்

திருமண மோசடி marriagecheating
By Petchi Avudaiappan Oct 21, 2021 04:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திருப்பூர் அருகே மணப்பெண்ணாக நடித்து விவசாயியிடம் நகை, பணம் மோசடி செய்த 5 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டத்தில் சேர்ந்த மாரப்பன் மகன் ராஜேந்திரன் என்பவர் விவசாயியாக உள்ளார். இவர்  தனது திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். ஆனால் பெண் கிடைக்காததால் திருமணம் செய்ய தரகர்களை நாட முடிவு செய்தார்.

அதன்படி அவர் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள சந்திரன் என்ற தரகரை பார்க்க சென்றார். அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஒருவர் உள்ளார் எனக் கூறியும் அவருக்கு நிறைய மணமகள் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனிடையே வள்ளியம்மாள் தன் வீட்டில் ரீசா என்ற மணப்பெண் அவரது அக்காள் தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகவும் கூறி ராஜேந்திரனை பெண் பார்க்க வரச்சொல்லியுள்ளார். இதை நம்பி குடும்பத்தினருடன் வந்த  ராஜேந்திரன் கடந்த மாதம் 22 ஆம் தேதி ரீசாவை நிச்சயம் செய்துள்ளார். உடனடியாக திருமணம் செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தவே 24 ஆம் தேதி பச்சாம்பாளையம் செல்லாண்டியம்மன் கோயிலில் ரீசாவை ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் தரகர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால், ராஜேந்திரன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்திற்காக தரகர் வற்புறுத்திய திருமணம் என்பதால் இது புரட்டாசி மாதமே தடால் புடாலாக நடந்துள்ளது.

இதன்பிறகு 25 ஆம் தேதி ராஜேந்திரன் வெளியே சென்றிருந்தபோது ரீசா ஒரு காரை வரவழைத்து ராஜேந்திரன் போட்டிருந்த தங்க நகைகளுடன் திடீரென மாயமானார். சந்திரன் மூலமாக ராஜேந்திரன் அரியலூரை சேர்ந்த தரகர் வள்ளியம்மாளை தொடர்பு கொண்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனால் அரியலூருக்கு சென்று விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின் பேரில் ராஜேந்திரனை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை திருடி சென்ற ரீசா , தரகர்கள் அம்பிகா , வள்ளியம்மாள்,  ரீசாவின் உறவினர் தேவி , தங்கம் ஆகியோர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.