படகு கவிழ்ந்து 100 பேர் உயிரிழப்பு : ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முயன்றபோது நேர்ந்த விபத்து

Accident MediterraneanSea
By Irumporai Apr 04, 2022 06:28 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் சென்ற போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலையில்லா திண்டாட்டம், வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல, கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்வதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வருவோரை தடுக்க கடும் கட்டுப்பாடுகளையும், கண்காணிப்புகளை ஐரோப்பிய நாடுகள் கையாண்டு வருகின்றன.

ஏற்கனவே இதுபோன்று சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக படகு ஒன்று ஐரோப்பா நோக்கி சென்றுள்ளது.

அப்போது திடீரென எஞ்சின் பழுது காரணமாக அந்தல் படகு நடுக்கடலில் சிக்கிக் கொண்டது. 4 நாட்களாக படகில் இருந்தவர்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த நிலையில், ஒரு கட்டத்தில் பீதியடைந்து தப்ப முயன்றுள்ளனர்.   

 அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிலரை மட்டும் உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது வேதனையளிப்பதாக உயிர் தப்பியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.