2 இடங்களில் இன்று மறுவாக்குப்பதிவு - நாளை வாக்கு எண்ணிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஆலப்பாக்கம் ஊராட்சி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடந்த 2ஆம் கட்டத் தேர்தலில் மொத்தமாக 78.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரத்தில் 85.31 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 69.34 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகின. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள பூந்தண்டலம் ஊராட்சியில் வாக்குச் சீட்டில் தவறான சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனால் வாக்குச்சாவடி எண் 173ல் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் 2வது வார்டுக்கும் இன்று மறு தேர்தல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஆலப்பாக்கம் ஊராட்சி கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, 32 ஆவது வாக்குச்சாவடியில் 1 மற்றும் 2 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 1வது வார்டு உறுப்பினர் சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் 1ஆவது வார்டுக்கு வாக்கு பதிவு இல்லை. இந்த வாக்குச்சாவடியில் ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மட்டுமே வாக்கு பதிவு செய்ய வேண்டும். இதில் இரண்டு வார்டுகள் வாக்குபதிவு ஒரே பூத்தில் நடப்பதால் குளறுபடி காரணமாக இரண்டாவது வார்டு வாக்காளர் மட்டும் கொடுக்க வேண்டிய வாக்குச் சீட்டை 1 மற்றும் 2-வார்டு வாக்காளர்களுக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது எதனால் இந்த வாக்குச்சாவடியில் ஊராட்சி வார்டுகான தேர்தலை மட்டும் தள்ளிவைக்கப்பட்டு இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆலங்காயம் பகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஜோலார்பேட்டை திமுக எம்.எல்.ஏ. தேவராஜ் சென்று வந்ததாக, அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
இதற்காக அதிகாரிகளுடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரை மாநில தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 74 மையங்களில் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும், 2ஆம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்கு பெட்டிகள் அனைத்தும் 74 வாக்கு மையங்களில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.