குடிசைப் பகுதிகளில் பற்றி எரிந்த தீ... 9 சிறுவர்கள் பலியான பரிதாபம்

By Petchi Avudaiappan Apr 20, 2022 09:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பாகிஸ்தானில் குடிசைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தாது மாவட்டத்தில் பைஸ் முகமது என்கிற கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதியில் கடந்த நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்படித்தது. ஒரு குடிசை வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த மற்ற குடிசைகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு தீயை அணைக்க முயன்ற நிலையில், தீ மளமளவென பரவியதால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இந்த விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதேபோல் தீயின் கோரப்படியில் சிக்கி 150 எருமை மாடுகள், மாடுகள், ஆடுகள் மற்றும் பிற கால்நடைகளும் இறந்தன.

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலி ஷா பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.