”வேக்சின் போடுங்க மக்களே” - தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் அதனை செலுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனாலும் ஒரு சில பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சம் இன்னும் நீங்கவில்லை. ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு தயார் நிலையில் உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அரசு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில வாரங்கள் மட்டும் அசைவம் மற்றும் மது குடிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெற்றது.
தற்போது அது மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 8வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் பெருநகர மாநகராட்சி சார்பில் இன்று 2 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்கு பெற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.