கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி - 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு - பொதுமக்கள் பாராட்டு
பெண்ணாடத்தில் 50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை போலீசார் இளைஞர்கள் உதவியுடன் உயிருடன் மீட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது தரைக்கிணற்றில் மூதாட்டி ஒருவர் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலறிந்த இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், இளைஞர்கள் உதவியுடன் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த மூதாட்டி, பெண்ணாடம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி கருப்பாயி (87) என்று தெரியவந்துள்ளது.
இவர் இயற்கை உபாதைக்கு சென்றபோது தவறி விழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மூதாட்டியை பத்திரமாக மீட்டவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மூதாட்டி கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.