இழுத்துச்சென்ற ராட்சத அலை -2 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய 82 வயது முதியவர்

marina beach giantwave
By Petchi Avudaiappan Sep 03, 2021 11:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 சென்னை மெரினாவில் 82 வயது முதியவரை ராட்சத அலை இழுத்துச்சென்ற நிலையில் அவர் 2 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் தப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவருடைய மகன் குமரன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவதாகவும்,ரயில் மூலம் சென்னை வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் தனது மகனை அழைத்துச்செல்வதற்காக கோவிந்தராஜ் வேலூரில் இருந்து பஸ் மூலம் சென்னை வந்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கியபோது, அவரது செல்போனில் தொடர்பு கொண்ட குமரன் தற்போது எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை.வேறொரு நாளில் ஊருக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து சென்னை வந்த கோவிந்தராஜூக்கு மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க ஆசை ஏற்பட்டது.

உடனே அவர், கோயம்பேட்டில் இருந்து பஸ் மூலம் அண்ணாசதுக்கம் வந்தார். பின்னர் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தார். கடலில் இறங்கி அலையை ரசித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

கடலில் மூழ்கிய கோவிந்தராஜ் காற்றின் வேகத்தில் சென்னை துறைமுகம் அருகே இழுத்துச்செல்லப்பட்டார். அவர் உயிர் பிழைக்க கரையை நோக்கி கடலில் தொடர்ந்து நீந்தியபடியே தத்தளித்தார். சுரஜ் அக்ரோ அருகே அவர் கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சன்னி தத்தா என்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் கவனித்தார். உடனடியாக அவர் கடலில் குதித்து கோவிந்தராஜை பத்திரமாக மீட்டார்.

அவருக்கு சென்னை துறைமுக பொறுப்புக்கழக அறக்கட்டளை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரிடம் சென்னை துறைமுக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதனிடையே கடலில் தத்தளித்த முதியவர் கோவிந்தராஜை பத்திரமாக மீட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் சன்னி தத்தாவின் துணிச்சல் மற்றும் மனிதநேயமிக்க பணியை பாராட்டி அவருக்கு ரூ.3 ஆயிரம் வெகுமதி வழங்கி மத்திய தொழிற் பாதுகாப்பு படை உயரதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.