பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு
தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் விழுந்த சிறுமி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகள் கார்த்திகா மூலக்கடை பகுதியில் வசித்து வருகிறார். கார்த்திகாவின் மகள் 8 வயது சிறுமியான ஹாசினி ராணி, தாத்தாவான ரங்கநாதன் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

மூச்சு திணறி இறந்த பரிதாபம் அப்போது, ஹாசினியின் காலில் மாட்டியிருந்த செருப்பு அங்குள்ள தண்ணீர் நிறைந்த ஒரு பள்ளத்தில் மிதந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பள்ளத்தில் இறங்கி பார்த்தபோது, சிறுமி நீரில் மூழ்கியிருந்தது தெரியவந்தது.
பின்னர் சிறுமியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை
7 அடி கொண்ட அந்த பள்ளத்தில் மழைநீர் அதிகளவில் இருந்ததால் சிறுமி வெளியே வரமுடியாமல் நீரில் மூச்சு திணறி இறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறுமி மூழ்கிய நிலையில், அங்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் தெரிவித்தனர். பூங்கா அமைக்கும் பணிக்காக எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.