கோர விபத்து: சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் பரிதாப மரணம்
8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பனம்பிக்குன்னு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது, பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கார் முழுவதுமாக சிதைந்து நொறுங்கியதால் காரின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன, 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மாணவர்களின் முகங்களை கூட காணமுடியாத அளவு சிதைந்து போயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
