பள்ளியில் மயங்கி விழுந்த 7ஆம் வகுப்பு மாணவி மரணம் - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

By Petchi Avudaiappan Apr 29, 2022 07:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருப்பூரில் உள்ள பள்ளியில் திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நிதர்சனா (12) பொங்கலூரில் உள்ள காட்டூர் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதற்றமடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக  மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் பல்லடம் அரசு மருத்துவமனையில் நிதர்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7ஆம் வகுப்பு மாணவி மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.