ஆங்கில பேச்சில் அசரவைக்கும் 74 வயது ஆட்டோ ஓட்டுநர் - இணையத்தில் வைரல்

Bangalore autodriver
By Petchi Avudaiappan Mar 29, 2022 10:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பெங்களூருவில் சரளமாக ஆங்கிலம் பேசிய ஆட்டோ ஓட்டுநரின் திறமையை இளம்பெண் ஒருவர் அதனை சமூக வலைத்தளம் மூலம் உலகறிய செய்துள்ளார். 

பெங்களூரில் சமீபத்தில் பரபரப்பான  காலை வேளையில் நிகிதா என்ற இளம்பெண் அவசர அவசரமாக பணிக்கு கிளம்பியுள்ளார். அப்போது மொபைல் ஆப் மூலம் தனியார் ஆட்டோ சேவையை அவர் வரவழைத்த போது அது பாதியில் ரத்தாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த நிகிதாவை நோக்கி ஒரு ஆட்டோ ஓட்டுநர் தானாகவே வந்து  சவாரி கேட்டுள்ளார்.

அந்த ஓட்டுநரின் வயதான தோற்றமும் நிதானமும் அவரை சற்று யோசிக்க வைத்து அலுவலகம் உள்ள பகுதியை சொல்லி , நேரம் ஆகிவிட்டது எனவும் கூறி அந்த ஆட்டோவில் பயணிக்க வைக்கிறது. நிகிதா அலுவலக விவரங்களை சொன்னபோது, "Please come in Ma'm, you can pay what you want." என அந்த 74 வயது ஆட்டோ ஓட்டுநர் ஆங்கிலத்தில் பேசி அசர வைத்துள்ளார்.

 நிகிதாவின் 45 நிமிட அலுவலகப் பயணம் நேரம் போவதே தெரியாமல் இருந்துள்ளது. அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் ஆர்வமுடன், எப்படி இதுபோன்று நல்ல முறையில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்? என கேட்டடுள்ளார்.  அதற்கு தான் மும்பையில் கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி உள்ளேன்.  எம்.ஏ., எம்.எட். முடித்துள்ளேன் என ஓட்டுநர் கூறியுள்ளார். 

தொடர்ந்து அப்புறம் ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள் என நீங்கள் என்னிடம் கேட்க போகிறீர்கள், சரியா? என ஆட்டோக்காரர் பதில் கேள்வி கேட்க, நிகிதா சிரித்தபடி ஆம் என பதிலளித்துள்ளார். உடனடியாக தனது கடந்த கால வாழ்க்கையை ஃப்ளாஷ் பேக் முறையில்  ஆட்டோ ஓட்டுநர் விவரிக்க ஆரம்பிக்கிறார்.

தனது பெயர் பட்டாபி ராமன் என்றும் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.  கர்நாடகாவில் எந்த வேலையும் கிடைக்காத சூழலில் மும்பையில் விரிவுரையாளராக சேர்ந்துள்ளார்.  கர்நாடகாவில் வேலை கேட்டு சென்ற இடத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, உங்களது சாதி என்ன? என்பது தான்.

அதற்கு எனது பெயர் பட்டாபி ராமன் என கூறியிருக்கிறார்.  அதற்கு அவர்கள் என்ன கூறினார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று படிப்போரின் யூகத்திறே பதிலை உணரவைத்து நிகிதா முடித்து விடுகிறார். கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் இருந்து இதுபோன்ற பதில்களை பெற்று மனமுடைந்த ராமன், மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் என்ற இடத்தில் உள்ள ஒரு மதிப்புமிக்க கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார்.

20 ஆண்டுகள் பணியாற்றி 60 வயதில் ஓய்வு பெற்றார்.  மீண்டும் பெங்களூரு நகருக்கு திரும்பியுள்ளார்.  அதன்பின் அவர் கூறும்போது, ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் இல்லை.தனியார் நிறுவனத்தில்  அதிகபட்சம் 10 முதல் 15 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.  அதனால் ஓய்வூதியமும் கிடையாது.

ஆட்டோ ஓட்டுவதில் நாளொன்றுக்கு ரூ.700 முதல் ரூ.1,500 வரை கிடைக்கிறது.  அது எனக்கும் எனது கேர்ள்பிரண்டுக்கும் போதும் என அவர் தெரிவித்துள்ளார்.  மனைவியை எப்போதும் சமஅளவில் நடத்த வேண்டும் என்பதால் அவரை கேர்ள்பிரண்டு என கூறியதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவிக்க நிகிதா சிரித்துக்கொண்டார்.

மேலும் மனைவி என்று கூறிய அடுத்த நிமிடம், அவள் ஓர் அடிமை.  நமக்கு சேவை செய்ய வேண்டும் என கணவன் நினைக்க தொடங்கி விடுவான்.  ஆனால், எனது மனைவி எந்த வகையிலும் எனக்கு குறைந்தவர் இல்லை.  சில நேரங்களில் அவர் என்னை விட உயர்ந்தவராகவும் ஆகி விடுவார் என விளக்கம் கூறியுள்ளார்.

 தங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் வீட்டு வாடகை தொகையை கொடுத்து உதவுவார் என்றும் கூறியுள்ளார்.  அதற்கு மேல் எங்களுடைய குழந்தையை சார்ந்து நாங்கள் இல்லை.  அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.  நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என ராமன் கூற இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிகிதா 74 வயதிலும், தனது வாழ்க்கையை பற்றி அவர் ஒரு குறையோ, வருத்தப்பட்டு பேசவோ செய்யாத பட்டாபி ராமை வியந்து பார்த்தாக குறிப்பிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில் இதுபோன்ற மறைந்திருக்கும் ஹீரோக்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என நிகிதா கூறியுள்ளார். இவரது பதிவு பத்திரிக்கை ஊடங்களிலும் தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.