7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது- நீதிமன்றம் கைவிரிப்பு
எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்தவழக்கு விசாரணைக்கு வந்தபோது, 7பேரின் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் முடிவுக்காக அனுப்பியுள்ளார்.
ஆகவே, இந்த விவகாரம் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக தற்போது காத்திருப்பில் உள்ளது என அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது. முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறினர்.
முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். அரசியல் தலையீடு காரணமாக நான் இன்னுமும் விடுதலை செய்யப்படவில்லை என வும் எனவே தன்னை விடுதலைசெய்ய உத்தரவிடக்கோரியும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் 7பேரின் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் முடிவுக்காக அனுப்பியுள்ளார். ஆகவே, இந்த விவகாரத்தை பொறுத்தவரை குடியரசுத் தலைவரின் முடிவுக்காக தற்போது காத்திருப்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது. முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.