நண்பனின் காதலுக்காக மாணவி கடத்தல்; 'நாடோடிகள்' பட பாணியில் சம்பவம் - பரபரப்பு!
சினிமா பட பாணியில் நண்பனின் காதலியை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம்பெண் கடத்தல்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் அரி அரவிந்த் (23). இவரும் இளம்பிள்ளையை சேர்ந்த பிரகதீஷ்வரியும் (21) கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அரி அரவிந்தை கண்டித்துள்ளனர். மேலும் அவரை சந்திக்க மாணவிக்கும் தடை விதித்தனர். இதனையடுத்து பிரகதீஷ்வரிவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாப்பிள்ளை வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது.
இதற்காக பிரகதீஸ்வரின் வீட்டார் 2 கார்களில் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த 4 மோட்டார் சைக்கிள்கள் 2 கார்களையும் வழி மறித்தது. அதிலிருந்து 8 பேர் கீழே இறங்கினர். அதில் அரி அரவிந்தை தவிர மற்ற 7 பெரும் முகமூடி அணிந்திருந்தனர்.
நண்பர்கள் கைது
பின்னர் தாங்கள் வைத்திருந்த கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் 2 கார்களையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். இதனையடுத்து காரிலிருந்த பிரகீதீஷ்வரியை தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.
அவர்களை தடுக்க முயன்ற பிரகீதீஷ்வரியின் தங்கையையும் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் வீட்டார் அளித்த புகாரின் பேரில், அரி அரவிந்துக்கு உதவிய நண்பர்கள் 7பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா பட பாணியில் அரவிந்த் மட்டும் முகமூடி அணியாமல் மற்றவர்கள் முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று திட்டம் தீட்டியது தெரியவந்தது.
நண்பர்களை போலீசார் கைது செய்தாலும் அரி அரவிந்தும், மாணவி பிரகதீஷ்வரியும் மாலை மாற்றி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் 'நாடோடிகள்' சினிமா காட்சியை நினைவூட்டுவதாக இருந்தது.