பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - சோகத்தில் பொதுமக்கள்

Arunachalpradesh armyofficersdied
By Petchi Avudaiappan Feb 08, 2022 06:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

அருணாச்சலப்பிரதேசத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அருணாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருவதோடு, கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள்  அதில் சிக்கினர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ராணுவ வீரர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். நமது நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையை நாம் ஒருபோதும் மறந்து விடமுடியாது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.