சென்னையில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு - தேதி அறிவிப்பு
6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு
அனைத்துலக சைவ சித்தாந்த 6-வது மாநாடு வரும் மே மாதம் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தருமை ஆதினம் 27-ம் குரு மகாசன்னிதானமும், மாநாட்டு தலைவரும். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். +
டாக்டர் பாரிவேந்தர்
இதில் பேசிய மாநாட்டு தலைவர் டாக்டர் பாரிவேந்தர், "அனைத்துலக சைவ சித்தாந்த 6-வது மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம், தமிழ் பேராயம் மற்றும் அனைத்துலக யை சித்தாந்த ஆராய்ச்சி மையமும் இணைந்து மே மாதம் 3,4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும்.
இந்த சைவ சித்தாந்த 6-ம் மநாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் வருகை தர உள்ளனர். அவர்கள் புத்தகங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு, தமிழை மேலும் மெருகேற்றி, தமிழகத்திற்கு பெருமையை சேர்ப்பார்கள்.
மொழி எந்த அளவிற்கு உயர்த்தப்படுகிறது என்றால் அது பெரும்பாலும் சைவ மடங்கள் மூலமாக நடைபெறுகிறது. இந்த சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் சைவ சித்தாந்தம் ஆராய்ச்சி மையத்திற்கு வாழ்த்துகள். உலகளவில் இதே போன்ற மாநாடு இதுவரை நடைபெறவில்லை" என டாக்டர் பாரிவேந்தர் பெருமிதம் தெரிவித்தார்.
தருமை ஆதீனம்
சைவ சித்தாந்த மாநாடு குறித்து பேசிய தருமை ஆதினம், 27-ம் குரு மகா சன்னிதானம் "1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தின் மூலமாகவும் வருகின்ற மே மாதம் 3,4,5 ஆம் தேதிகளில் அனைத்துலக சைவ சித்தாந்த 6-வது மாநாட்டை வெகு விமர்சையாக நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நபர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் 1500 கட்டுரையாளர்கள் கலந்துகொள்கின்றனர். 10 நாடுகளிலிருந்து 500 நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சைவ சித்தாந்தம் தொடர்பான 10-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட உள்ளன. ஆளுநர்கள், முதல்வர்களை அழைப்பதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2000 நபர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தருமை ஆதீனம் 27-ம் குரு மகா சன்னிதானம் தெரிவித்தார்.