முதல்வர் நிவாரண நிதியில் குவிந்த 69 கோடி ரூபாய்- ஸ்டாலினின் இரண்டு முக்கிய உத்தரவுகள்

Corona Stalin CM Fund
By mohanelango May 18, 2021 08:18 AM GMT
Report

தமிழக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொது மக்கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் இணையவழியாகவும் முதல்வரை நேரில் சந்தித்தும் நிதியுதவி வழங்கினர்.

இதில் பெறப்படும் நன்கொடை அனைத்தும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே செலவு செய்யப்படும் என்றும் செலவு கணக்குகள் அனைத்தும் வெளிப்படையாக பொது வெளியில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது வரை முதல்வர் நிவாரண நிதிக்கு 69 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் 29.44 கோடி ரூபாய் இணைய வழியிலும், 39.56 கோடி ரூபாய் முதல்வரை நேரில் சந்தித்தும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 25 கோடி ரூபாய் ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கும், 25 கோடி ரூபாய் மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் மூலம் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்கும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.