மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; முகக்கவசம் கட்டாயம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது "60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது.
இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.