"பொதுமக்களின் நலன் கருதி நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும்" - தொமுச பொருளாளர் நடராஜன் அறிவிப்பு
பொதுமக்களின் நலன் கருதி நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் நடராஜன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது, “போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும். முன்னணி நிர்வாகிகள் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு செல்வார்கள்.
போராட்டாம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்தார்.