பழச்சாறு குடித்த 6 வயது குழந்தை பரிதாபமாக மரணம் - சோகத்தில் பொதுமக்கள்
பல்லடம் பேருந்து நிலையத்தில் பழச்சாறு குடித்த 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூர் பகுதியில் இயங்கி தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டூ குமார் மற்றும் அவரது மனைவி சுஹாந்தி தேவி தம்பதியினரின் தன்னு குமார், அபிமன்யு ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளுடன் தங்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல்லடத்திற்கு பேருந்தில் சென்று பேருந்து நிலையத்தில் அவர்களை விட்டு விட்டு வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் அரிசி வாங்க கடைக்கு சென்றுள்ளார். அங்கு கணவர் வர தாமதமான நிலையில் அவரது மனைவி சுஹாந்தி தேவி அங்குள்ள ஜூஸ் கடை ஒன்றில் குழந்தைகளுடன் தானும் பழச்சாறு பருகி விட்டு கணவர் வருகைக்காக காத்திருந்துள்ளார். பின்னர் அங்கு வந்த கணவருடன் வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் குட்டூ குமாரின் மூத்த மகன் தன்னு குமாரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு வாந்தியும் வயிற்று போக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன் தன்னு குமாரை அவனது பெற்றோர் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்த விட்டார் என தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் இறப்புக்கு காரணம் என்ன? பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கடையில் வாங்கி கொடுக்கப்பட்ட ஜூஸ் காரணமா? என பல கோணங்களில் பேருந்து நிலையத்தில் உள்ள ஜூஸ் கடைக் காரர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் IBC Tamil
