எம்.பி ஆகும் கமல்ஹாசன்? தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவிற்கு செல்வது யாரெல்லாம்?
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆக உள்ள 6 பேர் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்யசபா எம்.பி
நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
தற்போது திமுக சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் எம்.எம்.அப்துல்லா, வில்சன், சண்முகம் மற்றும் அதிமுக சார்பில் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைய உள்ளது.
வைகோவிற்கு வாய்ப்பில்லை
இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் படி திமுக 4 ராஜ்யசபா எம்பிக்களையும், அதிமுக 2 ராஜ்யசபா எம்பிக்களையும் தேர்வு செய்ய முடியும். இதில் வில்சன் மற்றும் எம்.எம்.அப்துல்லா மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக திமுக தனது தொழிற்சங்கமான தொமுசவிலிருந்து ஒருவரை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்வதால், தொமுச சண்முகத்திற்கு பதிலாக தொமுசவை சேர்ந்த மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
வைகோவின் மகன் துரை வைகோ ஏற்கனவே லோக்சபா எம்.பி ஆக உள்ள நிலையில் மீண்டும் வைகோவிற்கு திமுக வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து திமுகவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
மேலும், மக்கள் நீதி மைய்யம் கட்சி 2024 லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த போதே கமலுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலையில், ராஜ்யசபா மூலம் கமல்ஹாசன் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் கடந்த முறை ராஜ்யசபா எம்பியான அன்புமணி ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணிக்கு சென்று விட்டதால் மீண்டும் அவர் தேர்ந்தேடுக்கப்பட வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது. அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிக்கட்ட அவர்களுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இணையும் போதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், எங்கள் கட்சி சார்பில் யார் ராஜ்யசபா செல்வார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் எல்.கே.சுதீஷ் அல்லது மகன் விஜய பிரபாகரனுக்கு பிரேமலதா விஜயகாந்த் சீட் வழங்க வாய்ப்புள்ளது.