வலிக்காமல் இருக்க காதில் மயக்க ஊசி - வாயில் நுரை தள்ளி 6 மாத குழந்தை பலி
காதில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் குழந்தை உயிரிழந்து விட்டது.
காது குத்தும் நிகழ்வு
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட்டை சேர்ந்த ஆனந்த் - சுபமானாசா தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 6 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காது குத்தும் போது வலி தெரியாமல் இருக்க, குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்த முடிவு செய்துள்ளனர்.
காதில் மயக்க ஊசி
இதற்காக குழந்தையை பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும் அனஸ்தீஷியா மயக்க ஊசி போட்டுள்ளார்.
அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்ததால் உடனடியாக குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியுள்ளது. உடனடியாக குழந்தையை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தை உயிரிழப்பு
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் இறப்பிற்கு காரணமான ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தையின் புகார் அளித்துள்ளனர்.
"பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும். மருத்துவர் மீது தவறு இருப்பது தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் அலீம் பாஷா தெரிவித்துள்ளார்.