தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது. இதன் காரணமாக வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால் 6 பதவியிடங்களுக்கு 4 உறுப்பினர் பதவிகள் திமுகவுக்கும், 2 அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.
திமுக மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடம் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக 2 இடத்தில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் எஸ்.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர சுயேச்சைகளாக 7 பேர் மனு தாக்கல் செய்தனர். கடந்த 31ஆம் தேதி மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 6 இடங்களுக்கு 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .
இந்த சூழலில் ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுவுடன் பிரமாணப் பத்திரம், வைப்புத்தொகை, 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுக் கடிதம் அளிக்கப்படவேண்டும் என்றும் முன்மொழிவு கடிதம் இல்லாத பட்சத்தில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமாரும், காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதாகவும், பிற்பகல் 3 மணியோடு வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்த நிலையில், 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.