அனுமதியின்றி `DJ’ பார்ட்டி நடத்தியதில் ஒருவர் பலி... கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
சென்னை திருமங்கலம் வி.ஆர். மாலில் அனுமதியின்றி நடைபெற்ற டிஜே பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி சென்னை திருமங்கலம் வி.ஆர். மாலில் அனுமதியின்றி டிஜே நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதாகவும், இதில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இளைஞர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான பிரவீன் என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலனின்றி மறுதினமே அவர் மரணமடைந்தார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முறையான அனுமதியின்றி `DJ’ பார்ட்டி நடத்தியது தெரிய வந்தது. மேலும் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் சப்ளை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,சம்பவ தினத்தன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள், இளம்பெண்களை முழுவதுமாக போலீசார் சோதனையிட்டதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் சந்தேகப்படும்படியான நபர்கள் சிலரை கண்காணித்து வந்ததில் இவர்கள் சமூக வலைத்தளம் மூலம் போதை பொருட்களை கைமாற்றி பயன்படுத்துவது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சட்டகல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த், கோட்டூர்புரத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர் அப்துல் ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி டாக்கஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் மாணவி டாக்கஸூக்கு எவ்வித போதை பழக்கம் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்கிற அடிப்படையில் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை வாங்கி கைமாற்றி வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.