தொடரும் வேட்டை- 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தினந்தோறும் நாளிதழ்களை திறந்தாலே கொலை செய்திகள் பிரதானமாக இருக்கின்றன.
இதனால் தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தியிருந்தார்.
தொடர் விமர்சனங்களுக்குள்ளானதையடுத்து கடந்த இரு நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு காவல் துறை அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சைலேந்திர பாபு ஐபிஎஸ்: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி காவல்துறையில் கடந்து வந்த பாதை - BBC News தமிழ் அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2,526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1110 என மொத்தம் 1117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொலைக் குற்றஙளில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.