காணாமல் போன தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை - ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு
காணாமல் போன தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு அரியலூர் மாவட்டம், வேலூர் கிராமம் வரதராஜ கோவிலில் அனுமதி சிலை ஒன்று காணாமல் போனது.
இந்த சிலையை இரவில் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். அனுமன் சிலை காணாமல் போன செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடுபோன அனுமன் சிலையை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை மேற்கொண்டதில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான் ராஜாராமன் www.christy.com என்ற இணையதளத்தில் சிலை உள்ளதை கண்டுபிடித்தார்.
இதனையடுத்து, அனுமன் சிலை புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து காணாமல் போன நிலையுடன் ஒப்பிட்டு அதை இந்திய தொல்லியல் துறை மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு அனுப்பினார்.
பிரெஞ்சு நிறுவன அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, இது காணாமல் போன அனுமன் சிலை என்பது கண்டுபிடித்தனர்.
அனுமன் சிலையை கிறிஸ்டி என்பவர் ஏலம் மூலமாக 37 ஆயிரத்து 500 டாலருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு உதவியுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலையை மீட்க தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை முயற்சி மேற்கொண்டனர்.
விசாரணையில், காணாமல் போன அனுமன் சிலை நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் விற்கப்பட்டதும், அவர் ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் சட்ட அமலாக்க அமைப்பு இணைந்து தற்போது சிலையை மீட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பொறுப்பாளர் மைக்கெல் கோல்ட்மேன் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் சிலையை இந்திய உயர் ஆணையர் மன்பீரித் வொஹ்ராவிடம் ஒப்படைத்தார். இச்சிலை இந்தியாவுக்கு வர ஒரு மாதமாகுமாம்.