வானில் இருந்து விழுந்த 500 கிலோ வளையம் - நிறம் மாறியதால் அச்சமடைந்த மக்கள்
வானில் இருந்து 500 கிலோ எடையுள்ள பொருள் விழுந்தது அந்த பகுதிக்கு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம பொருள்
ஏலியன் குறித்த பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இது குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கென்யாவின் முக்குகு (Mukuku) என்ற கிராமத்தில் மதிய நேரத்தில் பயங்கர சத்ததுடன் வளைய வடிவிலான பொருள் ஒன்று வானில் இருந்து விழுநதுள்ளது.
நிற மாற்றம்
இந்த பொருளானது 8 அடி விட்டத்தில் 500 கிலோ எடையுடன் இருந்துள்ளது. வானில் இருந்து விழும் போது சிவப்பு நிறத்தில் இருந்த இந்த பொருளானது சிறிது நேரத்தில் சாம்பல் நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும் அந்த பொருளானது வெப்பமாக இருந்துள்ளதால் மக்கள் அதனருகே செல்லவில்லை.
இது குறித்து தகவலறிந்த கென்யா விண்வெளி ஆய்வு நிறுவனம், அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு நடத்தியதில், அது விண்வெளியில் சுற்றி வந்த பொருள் என்றும், ராக்கெட்டில் இருந்து ஏவுகணையைப் பிரிக்கும் இடத்தில் இதுபோன்ற வளையம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வானில் இருந்து அதிக வேகத்தில் வந்ததால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக சிவப்பு நிறத்திற்கு மாறி இருக்கும் என்றும், கீழே விழுந்த பின்னர் அதன் வழமையான நிறத்திற்கு மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14000 டன்
இந்த பொருள் விழுந்ததில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பொருள் தற்போது அந்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டாலும் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். இது போன்ற பொருட்கள் விழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள வீட்டில் விண்வெளி குப்பை விழுந்து வீட்டு கூரையில் துளையை ஏற்படுத்தியது.
விண்வெளி தொடர்பான ஆய்வுகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் கழிவு பொருட்கள் பூமியில் விழுவது அதிகரித்துள்ளது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் 14000 டன்களுக்கு அதிகமான பொருட்கள் சுற்றி வருவதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது.