ஒரே நாளில் கொரோனாவால் 50 மருத்துவர்கள் மரணம்: அதிர்ச்சியளிக்கும் மருத்துவ அறிக்கை
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை என உலக நாடுகளையே இந்தியாவின் நிலையை கண்ணீர் வடிக்கும் நிலைக்கு கொரோனா கொண்டு சென்றுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. அதேசமயம் முன்களப்பணியாளர்களான மருத்துவர்களும் தங்கள் உயிரை பொருட்படுத்தாது நோயாளிகளோடு போராடி வருகின்றனர்.
இதனிடையே இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் போது 736 மருத்துவர்கள் உயிர் இழந்த நிலையில், 2வது அலையில் தற்போது வரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகப்பட்சமாக பீகார் மாநிலத்தில் 69 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியின் குரு தேக் பகதூர் மருத்துவமனையின் இளம் மருத்துவர் அனஸ் முஜாஹித்(26) கொரோனா உறுதி செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். இவர்தான் 2வது அலையில் உயிரிழந்தவர்களில் இளம் வயது மருத்துவர் ஆவார்.
மேலும் இறந்தவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டதாகவும், கடந்த 5 மாதங்களில் இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மருத்துவர்கள் தடுப்பூசி எடுக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ சங்கம் அனைத்து மருத்துவர்களும் கொரோனா தடுப்பூசி எடுப்பதை உறுதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாக இதுவரை ஆயிரம் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ள நிலையில் 3.5 லட்சம் உறுப்பினர்களின் பதிவை கொண்டு மட்டுமே மருத்துவ சங்கம் இறப்பு எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளது. சொல்லப்போனால் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் பலி எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.