5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் - கல்லால் அடித்தே கொலை செய்த கிராமப் பெண்கள்
திரிபுரா மாநிலம், காண்டேச்சேரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோயில் திருவிழா நடைபெற்றது.
அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 5 வயது பெண் குழந்தையை தரையில் அமர வைத்து பிரசாதம் வாங்கச் சென்றார். வந்து பார்க்கும்போது, சிறுமி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
இதனையடுத்து, கோவில் முழுவதும் மகளைத் தேடினாள். எங்கும் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமியைத் தேடி அலைந்தனர்.
மறுநாள் காலையில் காட்டுப் பகுதியில் அச்சிறுமி ஆடையில்லாமல், மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அச்சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குகொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் அச்சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரவிலிருந்து காணாமல் போயிருந்ததால் அந்த இளைஞர் மீது கிராமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அவனை தேடிப் பிடித்த அப்பகுதி கிராம மக்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து, அந்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து கற்களால் கிராம பெண்கள் பயங்கரமாக தாக்கினர்.
தலையில் முதல் உடல் முழுவதும் கல்லடிப்பட்டு, தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதில் மயங்கிய அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கிராமப் பெண்கள் கல்லால் அடித்தே கொலை செய்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.