சேட்டை செய்த தம்பி அடித்துக்கொலை - நாடகமாடிய அக்கா கைது

murder chengalpattu
By Petchi Avudaiappan Sep 17, 2021 07:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

அதிக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை சித்ரவதை செய்து அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது தெருவை சேர்ந்த தியாகராஜன் - சூசை மேரி தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இருவரும் வேலைக்கு செல்வதால் 2வது குழந்தை கீர்த்தி, மற்றும் 3வது குழந்தை ஆபேல் ஆகியோரை பீர்க்கன்காரணை காமராஜர் நகர் எம்ஜிஆர் தெருவில் உள்ள சூசை மேரியின் அக்கா டார்த்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இதனிடையே டார்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்ததை தொடந்து டார்த்தியின் மகள் மேரி இந்த சிறுவர்களை கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக மேரி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததால் இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனின் அக்கா கீர்த்தியிடம் விசாரித்தபோது மேரி அடிக்கடி சிறுவனை அடிப்பதுடன், சூடு வைப்பார் என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மேரியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவன் அதிகமாக குறும்புத்தனத்தில் ஈடுபட்டதால், அவனை அடிக்கடி தாக்கியும், சூடு வைத்து கொடுமைப்படுத்தி வந்ததும் தெரிந்தது.

சம்பவத்தன்று மேரி சிறுவனை சரமாரியாக தாக்கி தலையை பிடித்து சுவரில் மோதியதால் அவன் மயங்கி கீழே விழுந்துள்ளான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான் என நினைத்த மேரி, அப்படியே விட்டுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் அசைவின்றி கிடந்ததால், அவனை பரிசோதித்தபோது இறந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மேரி சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து மயங்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, மேரி மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.