திருப்பதி கோவிலில் 5 வயது சிறுவன் கடத்தல் - அதிர்ச்சியளிக்கும் வீடியோ
திருப்பதி கோவிலில் 5 வயது சிறுவன் கடத்தப்பட்ட நிலையில் தேவஸ்தான கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு நாமம் போடும் பணி செய்துவரும் வெங்கட்ரமணா என்பவர் தமது 5 வயது மகன் கோவர்த்தனனை உடன் வைத்துகொண்டு பணி செய்துகொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென கோவர்த்தன் காணாமல் போக, பதற்றமடைந்த வெங்கட்ரமணா திருமலையின் பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் தேவஸ்தான கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் உள்ள பெண் ஒருவர் 5 வயது சிறுவனை அழைத்துச்செல்வது தெரியவந்துள்ளது.
திருமலையில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி பேருந்தில் ஏறுவதும் பதிவாகியுள்ள நிலையில் அதற்கு பின் எங்கு இறங்கினார் என்று தெரியவில்லை. இதனால் குழந்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.