எருக்கம் பூ பறிக்க சென்ற சிறுவன் பரிதாபமாக பலியான சோகம் - தாம்பரத்தில் அதிர்ச்சி!
மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் விழுந்த சிறுவன்
சென்னை தாம்பரம் அடுத்த சானிடோரியம், சத்யா தெருவை சேர்ந்தவர் கரித்திக். இவரின் மகன் விஷ்வா (11). ராமக்ரிஷ்ணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
சானிடோரியம் மேம்பாலம் அருகே தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்ட ரயில்வே இடத்திற்கு விஷ்வா, தனது நண்பர்களுடன் எருக்கம் பூ பறிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் மீன் இருக்கிறதா என்று சிறுவன் எட்டிப்பார்த்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்துள்ளார். சேறாக இருந்த அந்த பள்ளம் சிறுவனை உள்ளே இழுத்துள்ளது.
பரிதாப பலி
இதனை கண்ட சிறுவனின் நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சிறுவன் விஷ்வாவை வெளியில் எடுப்பதற்கு முயற்சி செய்தபோதும், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.