ஒலிம்பிக் போட்டிக்கு 5 ஆயிரம் பதக்கங்கள் தயார்! பதக்கங்களை வெல்ல போவது யார்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 339 பந்தயங்களில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அத்துடன் 2-வது, 3-வது இடம் பெறுபவர்களுக்கு முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
குழு போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணியில் உள்ள அனைவரக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும். குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த போட்டியில் அரைஇறுதியில் தோற்போருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டியும் அங்கு ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்காக ஏறக்குறைய 5 ஆயிரம் பதக்கங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
வழக்கம் போல பதக்கத்தின் முன்பகுதியில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதென்ஸ் ஸ்டேடியத்தின் முன்பு நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் நடப்பு ஒலிம்பிக் போட்டியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்புறத்தில் ஜப்பான் கலைஞர் வடிவமைத்த போட்டி சின்னம், ஒலிம்பிக் வளையம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கங்களை தயாரிக்க மொத்தம் 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அத்துடன் பழைய செல்போன் மற்றும் கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு அதில் இருந்து கிடைத்த
உலோகங்களும் பதக்க தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.